Tuesday, November 3, 2009

காலம்...

பாக்தாதில், ஒரு வியாபாரி அவன் வீட்டில் தெருவை பார்த்து உட்கார்ந்து இருந்தான். தெருவில், சாமான் வாங்க சந்தைக்கு அனுப்பியிருந்த வேலைக்காரன் ஓடோடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.

வந்தவன், "முதலாளி, சந்தையில ஒரு பொம்பளை என்னை இடிச்சிட்டு போனா. திரும்பி பார்த்தா, அது 'சாவு' முதலாளி. அவளும் என்னை முறைச்சிட்டு நின்னாளா. எனக்கு ஒரே பயமாய் போச்சு."

"என்னடா உளர்றே", முதலாளி கேட்டான்.

"உங்களுக்கு புரிய வைக்க எனக்கு நேரம் இல்ல. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா உங்க குதிரைய கொடுங்க. நான் சமார்ராஹ்-கு போய் தப்பிச்சிப்பேன். அதனால என்னைய கண்டு பிடிக்க முடியாது. அப்புறம் நாளைக்கு பார்க்கலாம்.", என்றான் அவன்.

"சரி, எடுத்துட்டு போ."

அவனும் குதிரை மேலேறி, அதை விரட்டிக் கொண்டு போய்விட்டான்.

வியாபாரி சுவாரசியம் தாங்காதவனாய், உடனே சந்தைக்கு ஓடினான்.

கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த என்னை நெருங்கி, "என்ன நீ, என்னோட வேலைக்காரன பார்த்து, கொல்ராப்ல முறைச்சிட்டு நின்னயாமே?".

"நான் ஒண்ணும் முறைக்கலையே. உண்மையில, எனக்கு ஒரே ஆச்சர்யம் தான். அவனை இங்க பாக்தாத்ல பார்ப்பேன்னு கொஞ்சம் கூட நினைக்கலை. அவனை நான் சமார்ராஹ-ல இல்ல இன்னிக்கு சாயங்காலம் சந்திக்கறதா தான் இருந்தது."

இது Jeffery Archer-இன் To Cut A Long Story Short என்ற சிறுகதை தொகுப்பில் இருந்த அரேபிய நாட்டுக் குட்டிக் கதையின் மொழிப்பெயர்ப்பு.

Thursday, October 29, 2009

முதல் முதலாய்...

இது வரைக்கும் இல்லாமல் இருந்த எழுதும் ஆசை இப்பொழுது வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதும் அளவிற்கு எனக்கு அம்மொழியில் ஆளுமை இல்லை. தமிழில் இருக்கிறதா? என்ற கேள்விக்கு என் புதிய வலைப்பதிவுகள் தான் பதில் சொல்ல வேண்டும். என்னால் தமிழில் ஏகப்பட்ட பிழைகள் இல்லாமல் எழுதுவது கடினம் என்றாலும், நான் யோசிப்பது தமிழில் என்பதால், தமிழில் எழுதப் போகிறேன்.

அடுத்த கேள்வி. எதை பற்றி எழுதுவது? மென் பொருள் தொழில் பழகி என்னுடைய மூளைக்கு பகுத்து ஆராய்கிற திறம் கொஞ்சம் வளர்ந்து இருக்கிறது. கற்பனை வளம் தற்போதைக்கு சுத்தமாகக் கிடையாது. ஆதலால், நான் படித்ததைப் பற்றி எழுதப் போகிறேன். காலம் ஆக ஆக, மற்ற விஷயங்களைப் பற்றியும் எழுத முடியும் என்று நம்புகிறேன். வாசகர்கள் என்னுடைய வலைப்பதிவுகளில் உள்ள எந்தப் பிழையைக் கண்டாலும் பொறுத்து அருளாமல், சுட்டிக் காட்டும்படி வேண்டிக் கொள்கிறேன்.